ரயில்கள் மோதலைத் தடுக்கும் கருவி (ACD) வடகிழககு எல்லைப்புற ரயில்வேயில் செயல்படுத்தப்படுவதாக மத்திய ரயில்வேத் துறை இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை திட்டத்திற்கு உற்சாகமான முடிவு கிடைத்துள்ளது. இது தொடர்பான சிறு சிறு பிரச்சனைகள் ஆராய்ந்து தீர்க்கப்பட்டு வருகிறது.
இந்த மோதலைத் தடுக்கும் கருவியை (ACD) கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் தயார் செய்கிறது.
மேலும், இந்த கருவியானது வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின் கத்தியார்-கவுகாத்தி-திப்ரூகர்-லிடோ பிராந்திய ரயில்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.
வாஸ்கோ-ஹூப்ளி-குன்டகல்-ரேணிகுண்டா, எர்ணாகுளம்-பாலக்காடு-சென்னை, பெங்களூரூ-ஜோலார்பேட்டை போன்ற தென்னக, மத்திய, தென்மேற்கு பிராந்திய ரயில்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இதற்காக தற்போது ரூ.127.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மோதலைத் தடுக்கும் கருவியை படிப்படியாக ரயில்வேயின் அனைத்து அகலப்பாதை ரயில்களிலும் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் வேலு இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.