மிகச் சிறந்த பிற கல்வி நிறுவனங்களைப் போல இந்தியத் தொழில்நுட்பப் பயிலகங்களும் (ஐ.ஐ.டி.) அதிக தன்னாட்சி அதிகாரங்களுடன் செயல்படுவது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் 6-வது வருடாந்திர பான் ஐ.ஐ.டி. உலக கருத்தரங்கினை, பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று துவக்கி வைத்துப் பேசியதாவது:
கடந்த 60 வருடத்தில் சுமார் 1,70,000 பட்டதாரிகளை ஐ.ஐ.டி.க்கள் உருவாக்கி உள்ளன. ஐ.ஐ.டி.யில் படித்தவர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் அயல்நாடுகளில் பணியாற்றுகின்றனர். அவர்கள் தமது துறைகளில் முன்னோடிகளாக உள்ளனர். உலகெங்கிலும் தொழில்நுட்ப வளர்ச்சியில் இவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் இந்திய நாட்டின் அந்தஸ்தை உயர்த்திக் காட்டியுள்ளனர்.
உலகளவிலும், இந்தியாவிலும் அறிவுசார் பொருளாதாரம், சமுதாயத்தை உருவாக்குவதில் ஐ.ஐ.டி.யில் படித்தவர்கள் மிக முக்கிய பங்கை ஆற்றி வருகின்றனர். இன்று வெளியிடப்படும் ஐ.ஐ.டி.யின் தாக்கம் குறித்த ஆய்வு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ஐ.ஐ.டி. முறையின் வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு. அதில் மிகவும் முக்கியமானது ஐ.ஐ.டி.யின் தன்னாட்சி. மிகச் சிறந்த பிற கல்வி நிறுவனங்களைப் போல ஐ.ஐ.டி.க்களும் அதிக தன்னாட்சி அதிகாரங்களுடன் செயல்படுவது அவசியம். மற்றொன்று, ஐ.ஐ.டி.யில் சேர்வதற்கான மிகக் கடுமையான, போட்டிகள் நிறைந்த சேர்க்கை முறையாகும். இதனால் சிறந்த மாணவர்கள் மட்டுமே இங்கு சேர்ந்து படிக்க முடியும்.
ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வுகள் மூலம் அங்கு சேர்ந்து படிக்க ஒரு மாணவனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்றால், அதே அளவு திறமையான, புத்திசாலியான 3, 4 மாணவர்களுக்கு, மாணவர் சேர்க்கையில் உள்ள கட்டுப்பாடுகளால், வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது.
இதை உணர்ந்த மத்திய அரசு, பதினோராவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 8 புதிய ஐ.ஐ.டி.களை உருவாக்கியுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 6 ஐ.ஐ.டி.களை, தற்காலிக வளாகங்களிலோ, தற்போதுள்ள ஐ.ஐ.டி. வளாகங்களை பயன்படுத்தியோ துவக்க முடியும்.
சிறந்த உயர் கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கான இரண்டாம் கட்ட முயற்சிகளை அரசு துவக்கியுள்ளது. 8 ஐ.ஐ.டி.கள் தவிர, 30 மத்திய பல்கலைக்கழகங்கள், 7 இந்திய மேலாண்மை பயிலகங்கள் (ஐ.ஐ.எம்.), 10 தேசிய தொழில்நுட்ப பயிலகங்கள், 20 ஐ.ஐ.ஐ.டி.கள், 5 இந்திய அறிவியல் கல்வி நிறுவனங்கள், 2 திட்டமிடுதல், கட்டிடக் கலை பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் மாவட்டங்களில் 373 கல்லூரிகள், 1,000 பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றை புதிதாக அமைக்கவுள்ளோம்.
ஐ.ஐ.டி.கள் தவிர இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் பணிகளும், பங்கும் அங்கீகரிக்கப்பட வேண்டியதும், ஊக்கப்படுத்தப்பட வேண்டியதும் அவசியமாகும்.
நலிந்தவர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தரமான கல்வியை நாம் அளிக்க வேண்டும். இப்பிரிவினருக்காக அரசு பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் கல்வி வாய்ப்புகளை அதிகப்படுத்த நிச்சயம் உதவும்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.