சர்வதேசச் சந்தையில் கச்சா விலை குறைந்துள்ளதற்குத் தகுந்தவாறு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருடகளின் விலைகளைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமாஜ்வாடி, இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 20 நிமிடங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
மக்களவையில் இன்று பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு விவகாரத்தை சமாஜ்வாடி உறுப்பினர் ராம்ஜிலால் சுமன் எழுப்பினார்.
சர்வதேசச் சந்தையில் கடந்த ஜூலை மாதம் பேரல் ஒன்று 147 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, தற்போது பேரல் ஒன்று 40 டாலராகக் குறைந்துள்ளது. எனவே, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது போதாது. சமையல் எரிவாயு விலையும் குறைக்கப்படவில்லை.
எனவே, சர்வதேசச் சந்தையில் கச்சா விலை குறைந்துள்ளதற்குத் தகுந்தவாறு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் அறிவிப்பை மத்திய அரச உடனடியாக வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அவருக்கு ஆதரவான பிற சமாஜ்வாடி உறுப்பினர்களும், இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களில் சிலரும் எழுந்து நின்று பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
அவையில் அமைதி காக்குமாறு மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அவர்கள் கேட்காததால், அவையை 12.45 மணி வரை 20 நிமிடங்களுக்குத் தள்ளிவைத்து அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி உத்தரவிட்டார்.