பயங்கரவாதத்தை ஒடுக்க தேச புலனாய்வு முகமையை ஏற்படுத்தவும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்கவும் வகைசெய்யும் சட்ட திருத்தமும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறியது.
மும்பை மீது நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட இந்த இரண்டு சட்டவரைவுகளும், ஏற்கனவே நேற்று மக்களவையில் ஒருமனதாக நிறைவேறியது.
நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இந்தச் சட்டவரைவுகள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் சம்மதத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்விரு சட்ட வரைவுகளின் மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை அரசு கொடுக்க வேண்டும் என்ற நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப இந்த இரண்டு சட்டவரைவுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த இரண்டு சட்டவரைவுகளும் விரைவான மற்றும் செயற்திறனுள்ள விசாரணைகள், நேர்மையான மற்றும் விரைவான விசாரணை, கடும் தண்டனை ஆகிய மூன்றையும் பூர்த்தி செய்யும் என்று கூறினார்.