மும்பை பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற நெருக்கடியான நேரங்களில் தொலைக்காட்சி ஒளிபரப்புகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் 26 அன்று மும்பை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலை தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு நேரடியாக ஒளிபரப்பியது பல்வேறு தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுபோன்ற நேரடி ஒளிபரப்புகள் பயங்கரவாதிகளுக்கு சாதகமாகவும், பாதுகாப்பு படையினருக்கு இடையூறாகவும் அமைந்துவிடும் என்பதால் தொலைக்காட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், தொலைக்காட்சிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை செய்தி ஒளிபரப்பு தர விவகார குறைதீர்ப்பு ஆணையம் உருவாக்கியுள்ளது. அவற்றை இன்று ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜே.எஸ். வர்மா டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
நெருக்கடி (மோதல் நடைபெறும்) நேரங்களில் பிணையக் கைதிகளின் எண்ணிக்கை, அடையாளம், நிலை உள்ளிட்ட விவரங்களை வெளியிடக்கூடாது. மோதலில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையையோ அல்லது அவர்களின் தாக்குதல் முறைகளையோ அல்லது மீதமுள்ள மீட்பு நடவடிக்கை விவரங்களையோ வெளியிடக்கூடாது.
பயங்கரவாதி அல்லது பயங்கரவாத இயக்கம் அல்லது அத்தகைய கொள்கையை ஆதரிப்பவர்கள் ஆகியோருக்கு உதவுவதாக தெரிய வரும் எந்த தகவலையும் நேரடியாக ஒளிபரப்பக் கூடாது.
பார்வையாளர்களின் மனதை உறுத்தும் வகையிலான கோப்புக்காட்சிகளை தேவையில்லாமல் மறு ஒளிபரப்பு செய்வது அல்லது தொடர்ந்து ஒளிபரப்புவது ஆகியவற்றுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போது அதில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் அல்லது தொழில்நுட்ப வல்லுனர்கள் அல்லது குற்றத்திற்கு தொடர்புடையவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் யாரையும் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடாது.
பலியானவர்களை கண்ணியத்துடன் அணுகி அவர்கள் தொடர்புடைய காட்சிகளை ஒளிபரப்பாமல் இருக்குமாறு தொலைக்காட்சிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
ஆயுதச் சண்டை, உள்நாட்டு மோதல், மதக் கலவரம், பொது அமைதி குலைதல் அல்லது அதுபோன்ற சூழ்நிலைகளில் பொதுமக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி ஜே.எஸ். வர்மா கூறினார்.