நமது நாடு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கும் இந்த நேரத்தில், பயங்கரவாதத்தை முறியடிக்கத் தேசப் புலனாய்வு முகமை ஒன்று அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்ற காலத்தின் தேவையை முன்னிட்டே பயங்கரவாதத் தடுப்புச் சட்டவரைவுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஒடுக்க உருவாக்கப்படவுள்ள தேச புலனாய்வு முகமைக்கான சட்ட வரைவு, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத் திருத்த வரைவு ஆகியவற்றை இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் சிதம்பரம், இந்தச் சட்டவரைவுகளுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஒருமனதாக ஒப்புதல் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மத்திய மாநில அரசுகளுக்கு உள்ள அதிகார வரம்புச் சமநிலை எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டுவிடாத வகையில் தேசப் புலனாய்வு முகமைச் சட்டவரைவு உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல, மனித உரிமைகளின் அடிப்படையை எந்த விதத்திலும் மீறிவிடக் கூடாது என்ற கவனத்துடன் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் அவர்.
மேலும் "இப்போது இந்தச் சட்டவரைவுகளை நிறைவேற்றித் தாருங்கள். தேவைப்பட்டால் இந்தச் சட்டங்களை மேலும் கடுமையாக்கி, பிப்ரவரி மாதம் மீண்டும் நாடாளுமன்றத்தில் வைக்கிறேன்" என்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் எதிர்க்கட்சிகளுக்கு வேணடுகோள் விடுத்தார்.
முன்னதாக இந்த இரண்டு சட்டவரைவுகளுக்கும் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.