மராட்டிய பயங்கரவாதத் தடுப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கார்கரே கொலை செய்யப்பட்டது தொடர்பாகப் பொறுப்பற்ற கருத்துக்களை கூறியுள்ள சிறுபான்மையினர் விவகார அமைச்சர் ஏ.ஆர். அந்துலேவைப் பதவிநீக்க வேண்டும் என்று பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அந்துலேவின் கருத்துக்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தி உள்ளது.
பா.ஜ.க. நாடாளுமன்றப் பேச்சாளராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஷனவாஸ் ஹூசைன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், கேபினட் அமைச்சர் பதவியில் அந்துலே உள்ளதால், அவரது கருத்துக்கள் குறித்து மத்திய அரசு விளக்கமளித்தே தீர வேண்டும் என்றார்.
அந்துலேவின் கருத்துக்களால் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டமும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பாகிஸ்தான் உதவி செய்வதுடன், அதை ஊக்குவிக்கிறது என்ற இந்தியாவின் வழக்கும் பலவீனமடைந்துள்ளது என்ற அவர், அந்துலேவின் கருத்துக்களைப் பார்த்தால் பாகிஸ்தானின் வார்த்தைகள் போல உள்ளது என்றார்.
ஒருபுறம் தேச அளவில் பயங்கரவாதத்தை முறியடிக்கப் போராடுவதுபோலத் தோற்றமளிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இரண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டவரைவுகளை நிறைவேற்றித் தருமாறு நேற்று மக்களவையில் எதிர்க்கட்சிகளை வலியுறுத்தியது. மறுபுறம் அவர்களின் அமைச்சரே பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை வெளியிடுகிறார் என்றார் ஹூசைன்.