மும்பை மீது பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல்களை அடுத்து நமது நாட்டில் உள்ள அணு சக்தி மையங்கள் அனைத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தேசிய அணு சக்தி ஆணையத் தலைவர் அனில் ககோட்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் தேசிய நியூட்ரினோ அறிவியற்கூடம் அமைப்பது தொடர்பான பரிந்துரையை இன்று சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் அளித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அனில் ககோட்கர், கல்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் அணு மின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட எல்லை அணு சக்தி மையங்களும் பலத்த பாதுகாப்பு வளையத்தில்தான் அமைந்துள்ளன. இருந்தாலும் அதை வலுவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
மேலும், "மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளதையடுத்து அணு சக்தி மையங்களின் பாதுகாப்பை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். தேவை ஏற்பட்டால் ஒவ்வொரு மையத்திற்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்." என்றார் அவர்.
கல்பாக்கத்தில் உள்ள அணு மையங்களைச் சுற்றி 10 கி. மீ தொலைவிற்குள்ளும், 10,000 அடி உயரத்திற்குக் குறைவாகவும் விமானங்கள் பறக்கத் தடை விதித்து மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. தற்போது இதை மீண்டும் வலியுறுத்தி எல்லா விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் தாக்கீது அனுப்பியுள்ளது.
மும்பை தாக்குதல்களை அடுத்து, வான்வழிப் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்ததால், பாதுகாப்பை மறு ஆய்வு செய்வது என்று சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் முடிவு செய்தது. இதன் அடிப்படையில்தான் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கல்பாக்கத்தில் அணு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தரை, வான், கடல் ஆகிய மூன்று வழிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் போக்குவரத்து அறவே தடை செய்யப்பட்டுள்ளது.
கடலோரக் காவற்படையின் விசைப் படகுகள், ஹெலிகாப்டர்கள், டோர்னியர் விமானங்கள் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக கடலோரக் காவல்படை வட்டாரங்கள் தெரிவித்தன.