நமது நாடு முழுவதும் மொத்தம் 66 ரயில்வே பாலங்கள் வலுவிழந்து இடியும் நிலையில் உள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தில் பேசிய அமைச்சர் வேலு, நமது நாடு முழுவதும் மொத்தம் 1,27,788 பாலங்கள் ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் 66 பாலங்கள் மட்டும் வலுவிழந்து இடியும் நிலையில் அபாயகரமாக உள்ளன என்றார்.
இந்தப் பாலங்களை வலுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதற்குத் தகுதியில்லாத பாலங்களை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலங்களின் தற்போதை நிலை, வழித்தடத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்றார் வேலு.
2001-02 முதல் மொத்தம் 899 பாலங்களும், இந்த ஆண்டு துவக்கம் முதல் நவம்பர் வரை 22 பாலங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.