தமிழகக் கடற்கரையில் பன்னாட்டு நிறுவனங்கள் நச்சுக் கழிவுகளைக் கொட்டவில்லை என்றும், இனிமேலும் அது நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
மறுசுழற்சித் தொழிற்சாலைகளுக்கு என சிறப்பான விதிமுறைகள் உள்ளன. அதனடிப்படையில் மாசு அளவுகளை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பேப்பர் கப் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பதற்காக, தூத்துத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த அயல்நாட்டுக் கழிவு பொருட்களில் நச்சுக் கழிவுகள் அதிகளவில் இருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மாநிலங்களையில் இன்று அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் ஏ. இளவரசன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சுற்றுச்சூழல், வனத்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா, "தூத்துத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த பெட்டிகளில் ஒன்றில் மட்டும் அனுமிக்கப்பட்ட அளவிற்கு மேல் நச்சுக் கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் திருப்பி அனுப்ப சுங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளது." என்றார்.
வளர்ந்த நாடுகளிலும் கூட காட்மியம், தாமிரம், காரீயம் ஆகியவற்றிற்குக் கடுமையான தட்டுப்பாடு உள்ளதால், சுற்றுச்சூழலிற்கு உகந்தவாறும், பொருளாதார அடிப்படையின் பயனளிப்பதாகவும் மறுசுழற்சி செய்வது அதிகரித்து வருகிறது என்றும் மீனா கூறினார்.
மத்திய நீர்ச் சுத்திகரிப்பு ஆலைக்கு மத்திய மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி அதிகரிக்கப்படுமா என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மீனா, "அதற்கான பரிந்துரை எனது அமைச்சகத்தின் கீழ் நிலுவையில் உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.