மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலின்போது கொல்லப்பட்ட மராட்டிய பயங்கரவாதத் தடுப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கார்கரே மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஏ.கே. அந்துலே கூறிய கருத்துக்களால் மாநிலங்களவையில் அமளி எழுந்தது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பிறகு எழுந்த மூத்த பா.ஜ.க. உறுப்பினர் எஸ்.எஸ். அலுவாலியா, "கார்கரே மரணம் குறித்து ஊடகத்திடம் அந்துலே தெரிவித்துள்ள கருத்துக்கள் கவலை தருகிறது. மூத்த அமைச்சரான அவர் பொறுப்பற்றுப் பேசியுள்ளார். அதுபற்றி விவாதிக்காமல் இன்னும் அமைதியாக இருக்க இந்த அவையால் எப்படி முடிகிறது." என்றார்.
அவருக்கு ஆதரவாக ஐக்கிய ஜனதா தளம், அ.இ.அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமெழுப்பினர். இதனால் அவையில் சிறிது நேரம் அமளி நிலவியது.
அப்போது, இந்த விடயத்தை நாளை அவையில் அலுவாலியா எழுப்பலாம் என்று அவைத் துணைத் தலைவர் கே. ரஹ்மான் கான் கூறினார். இதையடுத்து பரபரப்பு அடங்கியது.
முன்னதாக நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சர் அந்துலே, கார்கரேவைப் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் கொலை செய்தார்கள் என்ற கூற்றில் சந்தேகம் இருப்பதாக கூறியதுடன், கார்கரே கொலைக்கும் அவர் விசாரித்து வந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கிற்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.