Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயங்கரவாத தடுப்பு சட்ட வரைவுகள் மக்களவையில் நிறைவேறியது

Advertiesment
பயங்கரவாத தடுப்பு சட்ட வரைவுகள் மக்களவையில் நிறைவேறியது
, வியாழன், 18 டிசம்பர் 2008 (09:31 IST)
பயங்கரவாதத்தை ஒடுக்க தேச புலனாய்வு முகமையை ஏற்படுத்தவும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்கவும் வகைசெய்யும் சட்ட திருத்தமும் நாடாளுமன்ற மக்களவையில் ஒருமனதாக நிறைவேறியது.

இவ்விரு சட்ட வரைவுகளின் மீதும் 6 மணி நேரத்திற்கு நடந்த விவாதத்திற்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கிடும் அதே வேளையில் இயற்கை நீதி, நியாயமான விசாரணை, மனித உரிமைகள் ஆகியன எந்த விதத்திலும் பாதிக்கப்படாத வண்ணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஆராய நீதிபதிகளைக் கொண்ட ஒரு சுதந்திர அமைப்பு விரைவில் ஏற்படுத்தப்படும் என்று கூறிய சிதம்பரம், தற்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ள திருத்தங்கள் எந்த விதத்திலாவது குறையுடையதாக இருந்தால் மீண்டும் நாடாளுமன்றத்தை அரசு நாடும் என்றும் கூறினார்.

அரசு முன்மொழிந்துள்ள இந்த திருத்தங்கள் எந்த விதத்திலும் தங்களையே மாய்த்துக்கொண்டு தாக்குதல் நடத்தவரும் பயங்கரவாதிகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகாது என்றும், அதே வேளையில் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு இது உதவும் என்று கூறினார்.

“இந்தச் சட்டங்கள் அனைத்தும் தண்டனைக்கு வழிவகுக்கக் கூடியனவேயன்றி, பயங்கரவாதத்தை தடுக்கக் கூடியவையல்ல. தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவரை ஓராண்டுக் காலம் வரை சிறைப்படுத்தலாம் என்ற சட்டம்தான் தடுக்கும் திறன் கொண்டது” என்று சிதம்பரம் கூறினார்.

“தற்பொழுது முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள், உலகளாவிய அளவில் பயங்கரவாதம் எ‌வ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி செய்வோர், பயங்கரவாத பயி‌ற்சி முகாம்களை அமைத்துத் தருவோர் இத்திருத்தத்தின் கீழ் தண்டிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிணைய விடுதலை நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட இரத்த மாதிரிகள், கைரேகை போன்றவற்றை மறுக்க வேண்டிய பொறுப்பு மட்டுமே குற்றம் சாற்றப்பட்டவர் மீது சுமத்தப்பட்டுள்ளது” என்று கூறிய அமைச்சர் சிதம்பரம், நமது நாட்டின் குற்றத்தடுப்புச் சட்டங்கள் அனைத்தும் மதச்சார்பற்றவையே என்று கூறினார்.

பயங்கரவாத நடவடிக்கைளைத் தடுக்க ஜனவரி 6ஆம் தேதி தலைநகர் டெல்லியில் முதலமைச்சர்கள் மாநாடு கூட்டப்படும் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil