ஜம்மு-காஷ்மீரில் இன்று 6-வது கட்டமாக 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 63 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும் குளிர் காரணமாக இன்று காலை வாக்குப் பதிவு மந்தமான நிலையில் தொடங்கினாலும், பின்னர் விறுவிறுப்பாக நடந்தது.
தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பிரிவினைவாத அமைப்புகள் அறிவித்திருந்த காரணத்தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இருந்தாலும் அவ்வமைப்புகளின் அறிவிப்பு வாக்குப் பதிவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மக்கள் வழக்கம்போல மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
அனந்த்நாக் தொகுதியில் ஏற்பட்ட ஒரு சிறிய நிகழ்வு தவிர மொத்தத்தில் தேர்தல் அமைதியாக நடந்ததாக தேர்தல் அதிகாரி மசூத் சமூன் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 7-வது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் வரும் 24ஆம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 28ஆம் தேதி நடக்கிறது.