'வாக்கிற்குப் பணம்' விவகாரத்தில் மத்தியப் புலனாய்வுக் கழகம் மூலம் விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டித்து, நாடாளுமன்றம் மீதான நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கையில், "நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசிற்குச் சாதகமாக வாக்களிக்க லஞ்சம் வழங்கப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் குறித்து மத்திய புலனாய்வுக் கழகம் மூலம் விசாரணை நடத்த வேண்டும். மூன்று மாதங்களுக்குள் குற்றவாளிகளின் பெயர்களை வெளியிட வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
'வாக்கிற்குப் பணம்' விவகாரத்தை விசாரித்த காங்கிரஸ் எம்.பி. கிஷோர் சந்திர சூர்யநாராயண தியோ தலைமையிலான மக்களவைக் குழு, இதில் அமர்சிங், அகமது பட்டேல் ஆகியோருக்குத் தொடர்பிருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறியுள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.