இந்திய- வங்கதேச எல்லையில் வேலியிடும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தனக்குத் திருப்தி தரவில்லை என்றும், அப்பணியைத் தீவிரமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
வங்காளதேசத்தில் முகாமிட்டுள்ள பயங்கரவாதிகளால் இந்தியாவிற்கு ஆபத்து உள்ளது என்பதை மத்திய அரசு நன்கு உணர்ந்துள்ளதாகவும், இதுகுறித்து வங்காளதேசத்தில் புதிய ஜனநாயக அரசு அமைந்தவுடன் அதனிடம் பேசப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
எல்லையில் வேலியிடும் பணியை திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்த சிதம்பரம், காலக்கெடுவிற்கு ஏற்ப திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வரைபடம் தயாரிப்பில் உள்ளதாகக் கூறினார்.