ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாத இயக்க 2 முக்கிய தீவிரவாதிகள் உள்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாரமுல்லா மாவட்டம் ரஃபியாபாட் என்ற இடத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடைசியாக கிடைத்த தகவல்படி தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சக செய்திதொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மைலுரா என்ற இடத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் நடத்திய கூட்டுத் தேடுதல் வேட்டையில் 2 முக்கிய தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளும் தெற்கு காஷ்மீரில் நடந்த பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் ஆவர். ஒருவர் பெயர் ரயீஸ் கச்ரூ என்றும் மற்றவர் அப்துல் ரஷித் என்ற அஷ்ஃபக் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் ரயீஸ் ஒரு வழக்குத் தொடர்பாக கடந்த நவம்பர் 4ஆம் தேதி புல்வாமா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு சென்ற போது காவலரை தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றார். இவரை காவல்துறையினர் வலை வீசி தேடிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதிகளிடமிருந்த 2 ஏ.கே. ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடி பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.