பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுத்துத் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இரண்டு சட்ட வரைவுகளுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவளிக்கும் என்று உறுதியளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, இது மிகவும் தாமதமான நடவடிக்கை என்று குற்றம்சாற்றியுள்ளார்.
பயங்கரவாதத்தை ஒடுக்க உருவாக்கப்படவுள்ள தேச புலனாய்வு முகமைக்கான சட்ட வரைவின் மீதும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத் திருத்த வரைவின் மீதும் நாடாளுமன்ற மக்களவையில் இன்று நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி, பயங்கரவாதத்தை முறியடிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் நமது நாடு ஏராளமான சேதங்களைச் சந்தித்துள்ளது. எனவே மத்திய அரசு தனது தவறை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முறியடிக்க கடுமையான சட்டங்கள் தேவை என்று வலியுறுத்தியதுடன், இந்தியாவுடனான போரில் மூன்று முறை தோற்றுவிட்டதால், மறைமுகப் போரில் அண்டை நாடு ஈடுபட்டு வருகிறது என்று பாகிஸ்தானைக் குறிப்பிடாமல் அத்வானி குற்றம்சாற்றினார்.
தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்ற கருத்தைத் திரும்பத் திரும்பக் கூறி வந்த மத்திய அரசு, நீண்ட தாமதத்திற்குப் பிறகு கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தேவை என்று கூறுவது, "பழைய குடுவையில் புதிய மதுபானம்" போல உள்ளது என்று கூறிய அத்வானி, பயங்கரவாதத்தை முறியடிக்க ஒவ்வொரு நாடும் சட்டரீதியான தனித்தனி அமைப்புக்களை உருவாக்க வேண்டும் என்ற ஐ.நா.வின் ஆலோசனையைக் கடைசியாகக் கடைபிடிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்றார்.
ஐ.நா. பாதுகாப்பு அவையின் ஆலோசனை 2001 இல் தரப்பட்ட பிறகு, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் உடனடியாக சிறப்புச் சட்டங்களை இயற்றியுள்ளன. ஆனால் நமது அரசு இப்போதுதான் தனது கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளது என்றார் அத்வானி.