பயங்கரவாதிகளால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது, பயணிகளை மீட்க நமது பிடியில் இருந்த பயங்கரவாதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது தனக்குத் தெரியாது என்று கூறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியது.
பயங்கரவாதத்தை ஒடுக்க உருவாக்கப்படவுள்ள தேச புலனாய்வு முகமைக்கான சட்ட வரைவின் மீதும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத் திருத்த வரைவின் மீதும் நாடாளுமன்ற மக்களவையில் இன்று நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அறிவியல் துறையின் அமைச்சர் கபில் சிபல், “1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காட்மாண்டுவிலிருந்து காந்தஹாருக்குக் கடத்தப்பட்டபோது, உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, விமானப் பயணிகளை மீட்க நமது பிடியில் இருந்த பயங்கரவாதிகளை விடுவிக்க ஒப்புக் கொண்டது தனக்குத் தெரியாது என்று கூறியதற்காக நாட்டு மக்களிடமும், மக்களவையிலும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.
“பயங்கரவாதம் நம்மிடையே கூட இருக்கலாம், ஆனால் அதனை தடுக்கவும் ஒடுக்கவும் நாம் ஒருமித்து நிற்க வேண்டும்” என்று கூறிய அமைச்சர் கபில் சிபல், “பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்கள், பயங்கரவாதிகளை தண்டிப்பதற்குத்தானே தவிர, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு அல்ல” என்று கூறினார்.
சட்டத்தால் பயங்கரவாதத்தை தடுக்க முடியாது என்பதற்கு மராட்டியத்தை உதாரணமாகக் காட்டிய கபில் சிபல், அங்கு அமைப்பு ரீதியான வன்முறைத் தடுப்புச் சட்டம் இருந்தும், அமீர் அம்ஜத் கசாப் போன்ற பயங்கரவாதியின் ஊடுறுவலைத் தடுக்க முடியவில்லையே என்று கூறினார்.
பொடா சட்டத்தைப் போன்று சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் கடுமையாக இல்லை என்று அத்வானி கூறியதற்கு பதிலளித்த கபில் சிபல், “உங்கள் அரசியலின் அச்சுறுத்தல் ஆயுதம் பொடா சட்டம்” என்று கூறினார்.