நமது நாட்டின் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களில் 94 விழுக்காடு பங்கை வகிக்கும் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்குவதற்கான சட்டவரைவு நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது.
மாநிலங்களவையில் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட அமைப்புசாராத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டவரைவு, இன்று மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அமைப்புசாராத் தொழிலாளர்களில் உள்ள வெவ்வேறு பிரிவினருக்கு ஏற்ற வகையில் பலதரப்பட்ட நலத்திட்டங்களை பரிந்துரைப்பதற்காக தேசியச் சமூகப் பாதுகாப்பு ஆலோசனை வாரியம் (National Social Security Advisory Board) ஒன்றை அமைக்க இந்தச் சட்டம் வழிசெய்கிறது.
இந்த வாரியத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் உடல்நலம், பேறுகாலப் பயன்கள், வயோதிக காலப் பயன்கள், வாழ்க்கை மற்றும் இயலாமை தொடர்பான நலத்திட்டங்கள் ஆகியவை குறித்த புதிய திட்டங்களை அரசு அறிவிக்கும்.
இதேபோல மாநில அரசுகளும் தங்கள் மட்டத்தில் ஆலோசனைக் குழுக்களை அமைத்துக்கொள்ள முடியும்.
மேலும், அமைப்புசாராத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு பிரத்யேக அடையாள எண்ணுடன் கூடிய அடையாள அட்டை ஸ்மார்ட் கார்ட் வடிவில் வழங்கப்படும். அதில் சம்பந்தப்பட்ட தொழிலாளர் பற்றிய எல்லா விவரங்களும் இருக்கும்.
இந்தச் சட்டவரைவின் மீதான விவாதத்தை நிறைவு செய்து பேசிய மத்திய தொழிலாளர் நலன் அமைச்சர் ஆஸ்கர் ஃபெர்ணான்டெஸ், இந்தச் சட்டம் அமைப்புசாராத் தொழிலாளர்களின் - குறிப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் வாழ்வில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்றார்.
இதுபோன்ற முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தாமதம் காட்டி வருகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாற்று குறித்துக் குறிப்பிட்ட அமைச்சர், தேசியக் குறைந்தபட்சப் பொதுச் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ள மத்திய அரசு, இந்தச் சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி உள்ளது என்றார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 1.2 கோடி அமைப்புசாராத் தொழிலாளர் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டம் ஏற்கெனவே துவக்கப்பட்டுள்ளது. அமைப்புசாராத் தொழிலாளர்களின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு ஆண்டிற்கு 100 நாட்கள் வேலை வழங்கும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் ஆஸ்கர் குறிப்பிட்டார்.