மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஒருவரை உத்தரப் பிரதேச மாநிலப் பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
மும்பை மீது கடந்த நவம்பர் 26 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானிற்குச் செல்லும் தொலைபேசி அழைப்புக்கள் இடைமறித்துப் பதிவு செய்யப்பட்டன.
இந்திய- நேபாள எல்லையில் தங்கியிருந்த சிக்கந்தர் என்ற பாகிஸ்தானியரின் செல்பேசி அழைப்பும் இடைமறித்துப் பதிவு செய்யப்பட்டது. இதில் அவர் ஐ.எஸ்.ஐ. உளவாளி என்று தெரியவந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தக் கைது நடவடிக்கை இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இதுபற்றிப் பயங்கரவாதத் தடுப்புப் படையினர் எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புக்கள் பற்றித் தகவல் சேகரிக்க சிக்கந்தர் முயன்றார் என்றும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.