2ஜி செல்பேசி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாற்றுக்கள் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி நிராகரித்ததை அடுத்து, இடதுசாரி உறுப்பினர்களும், ம.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.
மக்களவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பிறகு எழுந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா, 2ஜி செல்பேசி அலைக்கற்றை ஒக்கீட்டில் நாடு முழுவதும் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம்சாற்றியதுடன், அது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள தாக்கீதை நினைவூட்டினார்.
அதற்குப் பதிலளித்த அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, அவையில் ஒரு பொருளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கென்று சில விதிமுறைகள் இருப்பதாகவும், ஆச்சார்யாவின் வேண்டுகோள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கவன ஈர்ப்புத் தீர்மானத்தை அவைத் தலைவர் நிராகரித்தை அடுத்து அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களும், ம.தி.மு.க. உறுப்பினர்களும் எழுந்து நின்று கண்டன முழக்கங்களை எழுபபினர்.
அப்போது சில இடதுசாரி உறுப்பினர்கள், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் யுனிடெக், ஸ்வான் ஆகிய இரண்டு நிறுவனங்களக்கு மட்டும் சந்தை விலையை விட மிகக் குறைவான விலைக்கு அலைக்கற்றை ஒதுக்கப்பட்ட குற்றச்சாற்று குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
இதையடுத்து இடதுசாரி உறுப்பினர்களும், ம.தி.மு.க. உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.