கடந்த ஜூன் மாதம் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் 21 பேரை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மத்திய அரசைத் தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோள் கடிதத்தை மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு, அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் நேற்றுக் கொடுத்தார்.
ஆஸ்ட்ரேலியாவில் வேலை தருவதாகக் கூறித் தமிழக இளைஞர்கள் 21 பேரை, ஒவ்வொருவரிடமும் ரூ.1,70,000 பெற்றுக்கொண்டு ஒமர் அலி என்பவர் மலேசியாவிற்கு அழைத்துச் சென்றார்.
மலேசியாவில் தங்கியிருந்தபோது தமிழக இளைஞர்களின் பாஸ்போர்ட்டுகளை ஒமர் அலியின் பிரதிநிதி எனக் கூறிக்கொண்ட ஒருவர் எடுத்துச் சென்றுவிட்டார். இதனால் இளைஞர்கள் அனைவரும் கடும் நெருக்கடியில் சிக்கிக்கொண்ட நிலையில் அக்டோபர் மாதம் ஒமர் அலி இறந்து விட்டதாகத் தெரிய வந்துள்ளது.
இதனால் இளைஞர்கள் அனைவரும் நாடு திரும்ப முடியாத நிலையில், மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற பாவ் கேவ்ஸ் கோயிலில் தங்கியிருந்தனர். அவர்களை ஜூன் மாதம் மலேசியக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்துத் தகவலிந்ததும், தமிழக இளைஞர்களை உடனடியாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிற்குத் தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோள் கடிதத்தை அவரின் சார்பில், மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு, அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் நேற்றுக் கொடுத்தார்.
அப்போது தமிழக இளைஞர்களை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக பிரணாப் முகர்ஜி உறுதியளித்துள்ளார் என்று அமைச்சர் டி.ஆர். பாலுவின் அலுவலகச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.