Publish Date: Wed, 17 Dec 2008 (11:36 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
டெல்லி மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷீலா தீட்சித் 3ஆவது முறையாக முதல்வர் பதவியை இன்று ஏற்கிறார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள விழாவில் ஷீலா தீட்சித்திற்கும், 6 அமைச்சர்களுக்கும் துணை நிலை ஆளுநர் தஜேந்திர கன்னா இன்று பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.
முன்னதாக நேற்று அதிக இடங்களைப் பிடித்த தனிப்பெரும் கட்சியின் சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஷீலா தீட்சித், ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 43 இடங்களில் வெற்றிபெற்றது. பாஜக 23 இடங்களில் வெற்றிபெற்றது.
காங்கிரஸ் கட்சி சார்பில் 3ஆவது முறையாக பதவியேற்கும் ஒரே பெண் முதல்வர் என்ற பெருமையை ஷீலா தீட்சித் பெற்றுள்ளார்.
முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிந்த சில அமைச்சர்களும் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.