விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்து கொள்வதற்கும், விவசாயத்தில் தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கும் மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம் என்று குற்றம்சாற்றி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தினர்.
இந்தியா விடுதலை அடைந்த 1947 ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சி செய்த அரசுகள் அனைத்தும் வர்த்தகம், தொழில்துறை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகள் விரோதக் கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றன என்று குற்றம்சாற்றி டெல்லியில் இன்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி செல்ல முயன்ற இவர்களை ஜந்தர் மந்தர் பகுதியில் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ஒரிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
"வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள், தனியார் நிறுவனங்களின் வீரிய விதை உற்பத்தி முறைகள் ஆகியவற்றால் நமது விவசாயம் பாழ்பட்டுவிட்டது. குறிப்பாக பசுமைப் புரட்சி என்ற பெயரில் நமது விவசாய முறைகளை அரசு சீரழித்து விட்டது." என்று இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த இந்திய மக்கள் ஜனநாயக முன்னணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தர்ஷன்பால் குற்றம்சாற்றினார்.