பயங்கரவாதத்திற்கு எதிரான போரை அதிக வலிமையுடன் மேற்கொண்டு அதை முறியடிப்பதற்கான புதிய சட்டங்களை வரவுள்ளன என்றும், இது தொடர்பாக கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு விவாதித்து வருவதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.
கொச்சியில் இன்று காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாட்டில் பேசிய அவர், "பயங்கரவாதத்தை அதிக வலிமையுடன் எதிர்கொண்டு முறியடிப்பதற்கான புதிய சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதை விரைவாக மேற்கொள்ளும் வகையில் கூட்டணிக் கட்சிகளுடனும், எதிர்க்கட்சிகளுடனும் நமது மத்திய அமைச்சர்கள் பேசி வருகின்றனர். அனைவரின் ஆலோசனைகளையும் பெற்று அதனடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.
தேசியப் புலனாய்வு முகமை அமைத்தல், கடல் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய கடலோரப் பாதுகாப்பு வளையம் அமைத்தல் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய சோனியா, வரவிருக்கும் நாட்களில் புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்றார்.