இலங்கையில் நடந்து வரும் போரை நிறுத்துமாறு சிறிலங்கா அரசிற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவே கொடுக்காது என்று சிறிலங்கா ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபேயவர்த்தன கூறியுள்ளார்.
"இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகை குறித்து அதிகாரபூர்வத் தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அவ்வாறு சிறிலங்காவிற்கு இந்திய அமைச்சர் வேறு ஒரு விவகாரம் தொடர்பாக வந்தாலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறு அவர் அழுத்தம் எதையும் உறுதியாகக் கொடுக்க மாட்டார்.
பயங்கரவாதத்தை முறியடிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. இந்திய நாடாளுமன்ற மக்களவையில் இந்தியப் பிரதமர் ஆற்றிய உரையில், பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியா துணை நிற்கும் என்று கூறியிருக்கிறார்.
தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்க இணைந்து செயல்படுமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு சிறிலங்காவிற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வாய்ப்பே இல்லை. இந்தியப் பிரதமரின் சமீபத்திய அறிக்கைகள் இதையே உறுதிப்படுத்துகின்றன." என்று அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப கூறிதாக புதினம் இணைய தளச் செய்தி தெரிவிக்கிறது.