நாட்டில் 2.13 லட்சம் கூடுதல் அங்கன்வாடி மையங்களும், 77,102 சிறிய அங்கன்வாடி மையங்களும் அமைக்கப்பட உள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ரேணுகா சௌத்ரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் இதுவரை அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்படாத பகுதிகளில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை மூன்றாவது கட்டமாக விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மூன்றாவது கட்டத்தின் கீழ், 2.13 லட்சம் கூடுதல் அங்கன்வாடி மையங்களும், 77,102 சிறிய அங்கன்வாடி மையங்களும் அமைக்கப்படவுள்ளன. 792 கூடுதல் திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
தேவைக்கேற்ப 20,000 அங்கன்வாடி மையங்களை அமைக்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கும், கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் இணை உணவு அளிப்பதற்கான நெறிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆறுமாதம் முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, ஒரு குழந்தைக்கு ரூ.2 இணை உணவுக்காக தற்போது செலவிடப்படுகிறது. இது ரூ.4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து குறைவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஆறு மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு, இணை உணவுக்காக தற்போது செலவிடப்படும் தொகையான ரூ.2.70, ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இணை உணவுக்கான தொகை ரூ.2.30ல் இருந்து ரூ.5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2005-06ஆம் ஆண்டிலிருந்து இணை உணவு அளிப்பதற்காக ஆகும் செலவினை, மத்திய மாநில அரசுகள் சமமாக பகிர்ந்து கொள்கின்றன. 2009-10ஆம் ஆண்டிலிருந்து செலவினைப் பகிர்ந்து கொள்ளும் முறை மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு அம்மாநில அரசுகள் 10 விழுக்காடு தொகையையும், மத்திய அரசு 90 விழுக்காடு தொகையையும் அளிக்க உள்ளன.
பல்வேறு திட்டங்களின் கீழ், தனித்தனியாக வழங்கப்படும் சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி மற்றும் பாதுகாப்பான குடிநீர் வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 51 மாவட்டங்களில், சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ள வளர் இளம் பெண்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றும் அமைச்சர் ரேணுகா சவுத்திரி தெரிவித்துள்ளார்.