மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் மீண்டும் தாக்கியுள்ளதையடுத்து, அங்கு கோழிகளை அழித்தல் தொடங்கப்பட்டுள்ளது.
மால்டா மாவட்டத்தில் இந்நோய் பாதிப்புக்குள்ளான பகுதியைச் சுற்றிலும் 3 கி.மீ. தொலைவுக்கு உள்ள கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளை அழித்து, அவற்றை புதைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட மாஜிஸ்திரேட்டு ஸ்ரீதர் கோஷ் தெரிவித்தார்.
மால்டாவில் மட்டும் 3,500 கோழிப்பண்ணைகள் உள்ளன. ஹெச்5என்1 என்ற வகை வைரஸ் பரவியுள்ளதால், அங்குள்ள கோழிகள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.
கடுமையான மூடுபனி, மோசமான வானிலை காரணமாக கோழிகளை அழிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதாகவும், மொத்தம் 15 ஆயிரம் கோழிகளும், வாத்துகளும் அழிக்கப்படும் என்றும் கோஷ் கூறினார்.
இதற்கிடையே உயிரிழந்த கோழிகளின் மாதிரி இரத்தம் போபாலில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க மாநில கால்நடைத் துறை அமைச்சர் அனிசுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
மால்டா மாவட்டம் இங்கிலிஷ் பஜாரில் அடங்கிய நர்ஹாட்டா மற்றும் சத்கேரியாவில் இருந்து இந்த மாதிரி அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
நோய் பாதிப்புக்குள்ளான இடங்களில் கோழிகள் விற்பனை மற்றும் நுகர்வுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.