மும்பையின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகி்ஸ்தானுடன் நடத்திவந்த இருதரப்புப் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மும்பை பயங்கரவாத தாக்குதலிற்கு காரணமானவர்களின் மீது பாகிஸ்தான் வேகமாக நடவடிக்கை எடுக்க வேணடும் என்றும், இந்தியா அளித்துள்ள பட்டியலில் உள்ள 40 பேரையும் பிடித்து ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்று வந்த ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்ட்டுள்ளதா என்று செய்தியாளர்கள் வினவியதற்கு, “ஆம், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிராக குற்றமிழைத்தவர்கள் மீது பாகிஸ்தான் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பிரணாப் கூறினார்.
மும்பையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை அந்நாட்டு அயலுறவு அமைச்சருக்கும், இந்தியாவிற்கான அந்நாட்டுத் தூதருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரணாப், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவோம் என்று இந்தியாவிற்கு அளித்த உறுதிமொழியை பாகிஸ்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்.
மும்பைத் தாக்குதலின் பின்னனியில் பாகிஸ்தான் அரசின் அமைப்பு ஏதாவது உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டுள்ளார்கள் என்று நேரடியாகவே நாங்கள் கூறியுள்ளோம்” என்று கூறினார்.
இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை பாகிஸ்தான் மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்று 2004ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஷ் முஷாரஃப் பிரதமர் வாஜ்பாயிடமும், 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி தற்போது அந்நாட்டு அதிபராக உள்ள ஆசிஃப் அலி சர்தாரியும் இந்தியாவிற்கு உறுதியளித்துள்ளனர். இந்த உறுதிமொழிகளை பாகிஸ்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறிய பிரணாப், பாகிஸ்தானிலும், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியிலும் இயங்கிவரும் பயங்கரவாத முகாம்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று கூறினார்.
இந்தியா கோரியுள்ள அந்த 40 குற்றவாளிகளை பாகிஸ்தான் இந்தியாவிடம் கையளிக்கவில்லை என்றால் அந்நாட்டின் மீது இந்தியா போர் தொடுக்குமா என்று கேட்டதற்கு, “போர் அதற்கு ஒரு வழியல்ல. அவர்கள் செயல்பட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றோம், வார்த்தைகள் செயலாக வேண்டும்” என்று பிரணாப் பதிலளித்தார்.
காஷ்மீர் பேச்சுவார்த்தை தொடர்கிறது
காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண பிரிவினைவாதிகளுடனும், மற்ற இயக்கங்கள், கட்சிகளுடனும் மத்திய அரசு நடத்திவந்த பேச்சுவார்த்தையும் நிறுத்தப்பட்டுள்ளதா என்று செய்தியாளர்களுக்கு வினவியதற்கு, தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் பேச்சுகள் நிறுத்தப்பட்டுள்ளது என்று பதிலளித்த பிரணாப், “காஷ்மீர் மக்கள் பிரதிநிதிகளுடனும், மற்றவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவே வட்ட மேசை மாநாடும், பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேட தனித்தனி பணிக் குழுக்களும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும், தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்தவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்றும், பணிக் குழுக்கள் அளிக்கும் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
“பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுதான், அந்நாட்டின் பெரும் தலைவர்களில் ஒருவரான பெனாசிர் புட்டோ பயங்கரவாதத்திற்கு இரையானது பெரும் துயரம். பாகிஸ்தான் மக்களின் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்” என்று கூறினார்.
நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பிப்போம்
பயங்கரவாதிகள் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிற்கு அளிக்காதது ஏன் என்று வினவியதற்கு, ஆதாரங்களை நீதிமன்றத்தில்தான் சமர்ப்பிக்கவேண்டும், அப்போதுதான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். தண்டிக்க வேண்டியது நீதிமன்றம் தானே தவிர அரசுகள் அல்ல என்று பதிலளித்தார்.
“மெளலானா மசூத் அசாருக்கு எதிராக என்ன ஆதாரம் வேண்டும்? இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் ஆஃப்கானிஸ்தானிற்கு கடத்தப்பட்டபோது, பயணிகளை மீட்க சிறையில் இருந்த மசூத் அசார் விடுவிக்கப்பட்டார். இதற்கு பாகிஸ்தானிற்கு எதற்காக ஆதாரங்களைத் தர வேண்டும்? இந்தக் கடத்தல் பாகிஸ்தானில் நடைபெறவில்லையே? எந்த அடிப்படையில் ஆதாரங்களைக் கேட்கிறது பாகிஸ்தான்? தற்போது மசூத் அசார் வீட்டுச் சிறையில் வைக்க்ப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே விமானக் கடத்தல் வழக்கில் அவரை விசாரிக்க இந்தியாவிடம் அளிக்க வேண்டியதுதானே? அசாரை ஒப்படைக்கட்டும், அவருக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்” என்று பிரணாப் கூறினார்.