பயங்கரவாதத்தை முறியடிப்பதில் இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாட்டைத் துவங்கி வைத்து பிரதிநிதிகள் முன்பு பேசிய சோனியா, மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்து டிசம்பர் 11இல் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மூலம், பயங்கரவாதத்தை முறியடிப்பதில் இந்தியா ஒன்றுபட்டு நிற்கின்றது என்ற செய்தி நம் நாட்டின் எதிரிகளுக்கும், சர்வதேசச் சமூகத்திற்கும் வலுவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
"பயங்கரவாத சக்திகளை முறியடிப்பதில் இந்தியத் தேசமும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் உறுதியுடன் போராடுகின்றன என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம். பயங்கரவாதச் சக்திகளுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் வலுவான பதிலடி கொடுக்கும்" என்றார் அவர்.
பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களை முறியடிக்க தேசிய அளவிலான புலனாய்வு அமைப்பை உருவாக்குதல், கடல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு புதிய கடலோரப் பாதுகாப்பு வளையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்புக்களை வரும் நாட்களில் மத்திய அரசு வெளியிடவிருக்கிறது என்றும் சோனியா தெரிவித்தார்.