டெல்லி மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பா.ஜ.க. தலைவர் வி.கே. மல்ஹோத்ரா, தனது மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.
தெற்கு டெல்லி மக்களவைத் தொகுதி உறுப்பினரான வி.கே. மல்ஹோத்ரா, பா.ஜ.க. வின் மக்களவைத் துணைத் தலைவர் பொறுப்பை வகித்து வந்தார்.
இந்நிலையில், டெல்லி மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க., வி.கே. மல்ஹோத்ராவை முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தியது. அவர் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்டார்.
இந்தத் தேர்தலில் பா.ஜ.க. எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தது. ஆனால் மல்ஹோத்ரா தான் போட்டியிட்ட கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் வெற்றி பெற்றார்.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த மல்ஹோத்ரா, "என் மீது நம்பிக்கை வைத்து என்னைச் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்த கிரேட்டர் கைலாஷ் தொகுதி மக்களுக்கு உழைக்கும் வகையில், எனது தெற்கு டெல்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன்" என்றார்.
இதற்கிடையில், அவர் தனது பதவி விலகல் கடிதத்தை மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு அனுப்பிவிட்டதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.