பயங்கரவாதத்தை முறியடிக்க தேசியப் புலனாய்வு அமைப்பு ஒன்று அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்றுள்ள பா.ஜ.க., அந்த அமைப்பு கடுமையான சட்டத்தின் கீழ் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, கடுமையான சட்டம் இல்லாமல் தேசிய அளவில் புலனாய்வு அமைப்பை உருவாக்குவது அறிவற்ற நடவடிக்கை என்றார்.
இந்தியா ஒரு அசாதாரண சூழ்நிலையைச் சந்தித்து வருகிறது. எனவே இந்தியாவிற்கு ஒரு அசாதாரணச் சட்டம் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னதாகக் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, நமது தேசியப் பாதுகாப்பில் உள்ள குறைப்பாட்டை ஒட்டுமொத்த நாடும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளதால், காங்கிரஸ் கட்சியின் கையாளாகாத்தனம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனை மக்களவைத் தேர்தலில் முக்கிய இடத்தைப் பெறும் என்றார்.
மேலும், பயங்கரவாதம், பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.விற்குச் சாதகமாக எதிரொலிக்கும் என்பதால், பா.ஜ.க. தொண்டர்கள் தேர்தலைச் சந்திக்க இப்போது இருந்தே தயாராக வேண்டும் என்றார் அத்வானி.