பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ள தேர்வு முறை தவிர வேறு பல காரணங்களும் உள்ளன என்று மாநிலங்களவையில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
பள்ளி மாணவர்களிடையே தற்கொலைகள் அதிகரிப்பதற்கு தற்போதுள்ள தேர்வு முறைதான் காரணமா என்று தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) ஆய்வு செய்து வருவதாவும் அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று, 2004 முதல் 2006 வரை 16,000 பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்ற விவரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் டி. புரந்தேஸ்வரி, தற்போதைய கல்வித் திட்டத்தின் கீழ் பின்பற்றப்படும் தேர்வு முறையினால் ஏற்படும் மன அழுத்தம் மாணவர்களிடம் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து NCERT நடத்தி வரும் ஆய்வில் இன்னும் பரிந்துரைகள் வழங்கப்படவில்லை என்றார்.
குழந்தைகளுக்கு மன அழுத்தமும், சுமையும் அதிகரித்துள்ளது என்பதை நாங்களும் புரிந்துகொண்டுள்ளோம். ஆனால் தற்கொலைக்குத் தேர்வுகள் மட்டுமே காரணமல்ல என்ற அமைச்சர், "மன அழுத்தம் அதிகரிப்பதற்குப் பல்வேறு சமூக- பொருளாதாரக் காரணங்கள் உள்ளன... பல நேரங்களில் பெற்றோரின் மனச் சுமை குழந்தைகளைப் பாதிக்கிறது" என்றார்.
மேலும், மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஆலோசனைகள் வழங்கவும், உதவிகளை வழங்கவும் ஹெல்ப்லைன் துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் முதல் இணைய வழியாகவும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன என்றும் அமைச்சர் புரந்தேஸ்வரி தெரிவித்தார்.