Publish Date: Mon, 15 Dec 2008 (14:09 IST)
Updated Date: Mon, 15 Dec 2008 (14:04 IST)
நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டி எம்.பி.க்களுக்குப் பணம் தரப்பட்டதாக எழுந்த புகாரிலிருந்து, அமர்சிங், அகமது பட்டேல் ஆகிய 2 எம்.பி.க்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாற்றிற்கு உரிய ஆதாரம் இல்லை என்று புகாரை விசாரித்த மக்களவை நிலைக்குழு தெரிவித்துள்ளது.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த விவகாரத்தில் அரசிற்கு அளித்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை மத்திய ஐ.மு.கூ. அரசு சந்தித்தது.
அப்போது, மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டி தங்களுக்கு ரூ.3 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக, பா.ஜ.க. எம்.பி.க்கள் அசோக் அர்கால், ஃபாகன் சிங், மகாவீர் பகோரா ஆகிய 3 பேர் புகார் எழுப்பியதுடன், அவையின் நடுவில் வந்து கத்தை கத்தையாகப் பணத்தைக் காட்டினர்.
மேலும், இந்தப் பணத்தை சமாஜ்வாடி எம்.பி. அமர்சிங், காங்கிரஸ் எம்.பி. அகமது பட்டேல் ஆகியோர்தான் தங்களுக்குக் கொடுத்தனர் என்றும் அவர்கள் கூறினர். இததொடர்பாக சி.என்.என்.- ஐ.பி.என். தொலைக்காட்சியும் சில வீடியோ ஆதாரங்களை கொடுத்தது.
இந்நிலையில், இந்தப் புகாரை விசாரித்த காங்கிரஸ் எம்.பி. கிஷோர் சந்திர சூர்யநாராயண தியோ தலைமையிலான மக்களவைக் குழு, லஞ்சப் புகாரில் அமர்சிங், அகமது பட்டேல் ஆகியோருக்குத் தொடர்பிருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் இன்று சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், "அமர்சிங்கின் வீட்டிலிருந்து வெளிவரும் அல்லது உள்ளே செல்லும் கார் தொடர்பான வீடியோ படத்தின் முதல் பகுதி தெளிவாக இல்லை. காரின் பின் இருக்கையில் இருந்த நபர்களின் முகங்களும் தெரியவில்லை. எனவே அமர்சிங் மீதான குற்றச்சாற்றை நிரூபிக்க நேரடி ஆதாரம் இல்லை" என்று மக்களவைக் குழு கூறியுள்ளது.
இருந்தாலும், அமர்சிங்கின் உதவியாளர் என்று கூறப்படும் சஞ்சீவ் சக்சேனா, ஓட்டுநர் சோஹைல் ஹிந்துஸ்தானி, பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானியின் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி ஆகியோர் மீதான குற்றச்சாற்றுக்களை சம்பந்தப்பட்ட அமைப்புகள் மூலம் விசாரிக்க மக்களவைக் குழு பரிந்துரைத்துள்ளது.
Webdunia
Publish Date: Mon, 15 Dec 2008 (14:09 IST)
Updated Date: Mon, 15 Dec 2008 (14:04 IST)