மும்பையில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு பதில் சொல்லியே தீர வேண்டும் என்றும், இதன் பின்னணியில் பாகிஸ்தானில் செயல்படும் லஸ்கர்-இ-தொய்பா உள்ளது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ள கார்டன் பிரவுன் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
அப்போது, மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல், இதற்கு பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசினார்கள். தாக்குதலில் பலியான இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் பற்றிய விவரம், லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பின்னணி இருப்பதற்கான ஆதாரங்களை இந்தியா பிரவுனிடம் கொடுத்தது.
இந்த சந்திப்பின் போது அயலுறவு செயலர் சிவ சங்கர்மேனன், பிரதமரின் முதன்மை செயலர் டி.கே.ஏ.நாயர் உள்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பிரவுன், "மும்பையில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானில் செயல்படும் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தான் என்பது நன்றாக தெரியும். பாகிஸ்தான் இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்" என்றார்.
பயங்கரவாதிகளை வேறோடு அழிக்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பயங்கரவாதிகளுக்கு யாரும் அடைக்கலம் கொடுக்க கூடாது என்றும் நிதியுதவி செய்யக்கூடாது என்றும் கூறினார்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கு, இங்கிலாந்து முழு ஆதரவு தரும் என்று கூறிய பிரவுன், மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் கவலையை பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் எடுத்துரைப்பதாக கூறினார்.