ஆந்திராவில் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த 2 மாணவிகள் மீது ஆசிட் ஊற்றிய 3 மாணவர்களை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
கடந்த புதனன்று பொறியியல் கல்லூரி மாணவிகளான ஸ்வப்னிகா, ப்ரனீதா ஆகியோர் மீது மாணவர் ஸ்ரீநிவாஸ் ஆசிட் வீசினார். இதில் அந்த 2 மாணவிகளின் முகமும் சிதைந்ததுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் ஒரு மாணவியின் தந்தை இதுகுறித்து புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் கசிந்ததால் இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இதன் காரணமாக அந்த 2 அதிகாரிகளும் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மாணவிகளிடம் நலம் விசாரிப்பதற்காக அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேற்று சென்ற அம்மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் ஜனா ரெட்டியை முற்றுகையிட்டு பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முழக்கமிட்டனர்.
இந்நிலையில், நேற்றிரவு மாணவிகள் மீது ஆசிட் வீசியதாக கூறப்படும் ஸ்ரீநிவாஸ், அதற்கு உதவி புரிந்த அவரின் 2 நண்பர்களை காவல்துறையினர் மவுனூர் அருகே சுட்டுக் கொன்றனர்.
முதற்கட்ட தகவலின்படி, சுட்டுக்கொல்லப்பட்ட 3 இளைஞர்களும், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த முயன்றதாகவும், இதையடுத்து தங்களை தற்காத்துக் கொள்ள காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட ஆசிட் வீசி காயப்படுத்தும் வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனையை எக்காரணத்திற்காகவும் குறைக்கக்கூடாது என்று மும்பை நீதிமன்றம் தண்டனையை குறைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.
இப்படிப்பட்ட குற்றங்கள் நிகழ்வதை கடுமையான தண்டனையின் மூலம் தடுக்காவிட்டால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.