மும்பையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிற்கு அளிப்போம் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சி.என்.என்.-ஐ.பி.என். தொலைக்காட்சியின் ‘டெவில்ஸ் அட்வகேட்’ நிகழ்ச்சியில் கரன் தாப்பர் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மும்பைத் தாக்குதல் தொடர்பான புலனாய்வு நடந்து வருகிறது. இதில் கிடைக்கும் அனைத்து ஆதாரங்களையும் பாகிஸ்தானிற்கு அளிப்போம் என்று கூறியுள்ளார்.
“அது (மும்பைத் தாக்குதல்) தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் அளிப்போம். புலனாய்வு தொடர்ந்து நடந்து வருகிறது, இன்னமும் முடியவில்லை. எனவே, இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களை பரிமாறிக்கொள்வது சரியாக இராது” என்று பிரணாப் கூறியுள்ளார்.
மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாற்றப்பட்டுள்ள லஸ்கர் ஈ தயீபாவின் முன்னனி அமைப்பான ஜமாத் உத் தாவா தடை செய்யப்பட்டிருப்பதும், அதன் உறுப்பினர்கள் பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டிருப்பதும் திருப்தி அளிக்கிறதா என்று கேட்டதற்கு, “இப்படிப்பட்ட நடவடிக்கைகள் (2003ஆம் ஆண்டு) நாடாளுமன்றத் தாக்குதல் நடந்தபோதும் உலக நாடுகள் அளித்த நெருக்கடியின் காரணமாக மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு அனைவரையும் விடுவித்து விட்டனர்” என்று கூறிய பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தான் அரசு சிரத்தையுடன் செயல்படுகிறதா என்பதைப் பொறுந்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.
“பாகிஸ்தானில் இயங்கிவரும் பயங்கரவாத முகாம்கள் முழுமையாக களையப்பட வேண்டும், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் உறுப்பினர்கள் வேறு பெயரில் மீண்டும் தலையெடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று பிரணாப் கூறியுள்ளார்.