மும்பை பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் ஒரு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியா வருகிறார்.
பிரவுனின் வழக்கமான நிகழ்ச்சி நிரலில் அவரது இந்தியப் பயணம் குறித்து எதுவும் இல்லை. எனினும் மும்பைத் தாக்குதல் பற்றி அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாக சந்தித்து பேச விரும்புவதால் இந்தியா வர உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ஒரு நாள் முழுவதும் இருக்கும் பிரவுன், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச இருக்கிறார். டெல்லி வரும் அவரிடம் மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை அப்போது பிரதமர் மன்மோகன் சிங் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் கடந்த நவம்பர் 26ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரவுன், தாக்குதலுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு இந்தியாவுக்குத் தேவையான எந்தவிதமான உதவியையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.