Publish Date: Fri, 12 Dec 2008 (21:40 IST)
Updated Date: Fri, 12 Dec 2008 (21:40 IST)
இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, அடுத்த மூன்றாண்டுகளில் 1,400 கோடி டாலரை கடனாக வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.
இதில், 960 கோடி டாலரை உலக வங்கியின் ஒரு அங்கமாக செயல்படக் கூடிய சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியும் (IBRD), 440 கோடி டாலரை சர்வதேச மேம்பாட்டு சங்கமும் (IDA), கடனாக வழங்க இருப்பதாக உலக வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்னுரிமையளித்து பட்டியலிடப்பட்டுள்ள உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 30 கோடி இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்தியாவில் 30 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 60 விழுக்காட்டினர் இந்தியாவின் மிகவும் ஏழ்மையான 7 மாநிலங்களில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக இந்தியாவின் வேகமான வளர்ச்சி தடைபடக்கூடாது.
வறுமையில் உள்ள இந்த 7 மாநிலங்களையும் மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்தியாவின் மத்திய வருவாய் மாநிலங்களில் உள்ள மக்களை பற்றியும் மறக்கவில்லை என்றும் கூறியுள்ளது.
இந்தியாவில் உள்ள எந்த ஒரு நகரமும் ஒரு நாளில் 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் தண்ணீர் வழங்குவதில்லை. மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு மட்டுமே பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களில் 40 விழுக்காடு கிராமங்கள் சாலையுடன் இணைக்கப்படவில்லை என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
Webdunia
Publish Date: Fri, 12 Dec 2008 (21:40 IST)
Updated Date: Fri, 12 Dec 2008 (21:40 IST)