சட்டீஸ்கர் மாநில முதல்வராக ராமன் சிங் இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
தலைநகர் ராய்ப்பூரில் காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
சட்டீஸ்கரில் ஏற்கனவே ராமன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றது. அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ராமன் சிங் தலைமைக்கு மக்கள் மீண்டும் அங்கீகாரம் அளித்து பாஜகவை வெற்றி பெறச் செய்தனர்.
2003ஆம் ஆண்டு அஜீத் ஜோகி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய ராமன் சிங், கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் மக்கள் மீண்டும் அவருக்கு வாய்ப்பளித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், ராய்ப்பூர், பிலாஸ்பூரில் மெட்ரோ ரயில் திட்டம், ஏழைகளுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி ஆகிய வாக்குறுதிகளை விரைவிலேயே நிறைவேற்ற இருப்பதாக பதவியேற்ற பின் ராமன் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.