மும்பையில் கடந்த நவம்பர் 26ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், அமைதியை வலியுறுத்தியும் மாபெரும் மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்பட 60,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
பயங்கரவாத தாக்குதல்கள் நடந்த தாஜ் ஓட்டல், ஓபராய், டிரைடண்ட் ஓட்டல் மற்றும் நரிமன் இல்லம் வழியாக நடந்த இந்த மனிதசங்கிலி பேரணியில் முக்கிய பிரமுகர்கள் உள்பட பொதுமக்கள் சுமார் 50 கிலோ மீட்டர் நீளத்துக்கு வரிசையாக கைகோர்த்து நின்றனர்.
இதற்காக இன்று நண்பகல் முதலே ஆயிரக்கணக்கான மும்பை மக்கள் சாலைகளில் குவிந்தனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள், "நாம் அனைவரும் ஒன்று", "பாரத மாதா வாழ்க", "வன்முறை தேவையில்லை" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கையில் ஏந்தியபடி மும்பை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
மனிதசங்கிலி பேரணியில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, பாடலாசிரியர் ஜாவித் அக்தர், நடிகர் ராகுல் போஸ் முன்னாள் மேயர் சாந்தி பட்டேல் உள்பட பலரும் இந்தப் பேரணியில் பங்கேற்று தங்களது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர்.