தாவூத் இப்ராஹிம் கராச்சியில் வசிப்பதாகவும், மும்பையின் கடல்வழிகளை நன்கு அறிந்த அவர்தான் பயங்கரவாதிகளுக்கு உதவியுள்ளார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி கூறினார்.
இதுகுறித்து மக்களவையில் இன்று பேசிய அவர், மும்பை தாக்குதல்களில் தாவூத் இப்ராஹிம்மிற்குத் தொடர்பு உள்ளதாகக் கூறியதுடன், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்காமல் வைத்திருப்பதற்குப் பாகிஸ்தான் எந்த நியாயமும் கற்பிக்க முடியாது என்றார்.
"தாவூத் இப்ராஹிம் கராச்சியில் வசிக்கிறார். பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்கு முன்பு அவர் கடத்தல் தொழிலில் இருந்ததால், மும்பை கடல்வழிகளை அவர் நன்கு அறிவார். இதனால் அவர்தான் பயங்கரவாதிகளுக்கு உதவியுள்ளார் என்பதில் சந்தேகமில்லை" என்றார் அத்வானி.
மும்பை மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவிவிலக வேண்டும் என்று தனது கட்சி கோரவில்லை என்று குறிப்பிட்ட அத்வானி, அது குறித்து குறுகிய காலத்திற்குள் (பொதுத் தேர்தல்) மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.