பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது பிரச்சனைக்குத் தீர்வல்ல ஆனால், தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து இயங்கும் பயங்கரவாத இயக்கங்களின் மீது பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
மக்களவையில் இன்று விதி 193ன் கீழ் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தனது பெயரைப் பயன்படுத்தி பாகிஸ்தான் அதிபரைத் தொலைபேசி அழைப்பில் மிரட்டியுள்ளதற்குக் கண்டனம் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் மறைமுகமான தந்திரங்களில் இதுவும் ஒன்று என்று குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானின் இராணுவமும் உளவு அமைப்புகளும் உச்சகட்ட விழிப்புடன் உள்ள நிலையில், ராஜ்ய விவகாரங்கள் பறிமாறிக்கொள்ளப்படும்போது, இதுபோன்ற தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வது முறையல்ல என்றார்.
ராஜ்யரீதியான தொலைபேசி உரையாடல்கள் நடக்கவிருந்தால், அதற்கான நேரத்தை நிர்ணயம் செய்து உரையாடலைப் பதிவு செய்ய வேண்டும்- இந்த முறையில்தான் பாகிஸ்தான் அரசு செயலாற்ற வேண்டும் என்றார் அவர்.
தனது விவாதத்தின்போது, பாகிஸ்தானின் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் மோகன் ரால் கோரியதற்குப் பதிலளித்த பிரணாப், பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்காது என்றார்.
இது ஒரு, காஷ்மீர் போன்ற இருதரப்பும் சேர்ந்து தீர்க்க வேண்டிய விவகாரங்கள் அடங்கிய சிக்கலான பிரச்சனை என்ற பிரணாப், பாகிஸ்தானைத் தாக்குவது இப்பிரச்சனைக்குத் தீர்வாகாது என்றார்.
மேலும், பாகிஸ்தான் அரசால் தடுக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகள் சிலர் அந்நாட்டுத் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுப்பதன் மூலம், பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு அக்கறையில்லாமல் நடந்துகொள்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று குறிப்பிட்ட பிரணாப், பயங்கரவாதத்தை முறியடிக்கப் பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.