பயங்கரவாதத்தை ஒடுக்க அடுத்த சில மாதங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்றும், பயங்கரவாதிகளுக்கு நிதி வருவதைத் தடுக்க தனித்த சட்டம் ஒன்று நிறைவேற்றப்படும் என்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் சிதம்பரம், “மும்பைத் தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி பாகிஸ்தானை நோக்கி கை காட்டுகின்றன” என்று கூறினார்.
பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்கவும், புலனாய்வு செய்யவும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கவும் பல சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது என்றும், அதற்கு அனைத்துக் கட்சிகளும் அரசிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்தத் திசையில் அரசு மேற்கொள்ளப்போகும் முக்கிய நடவடிக்கை, பயங்கரவாத நடவடிக்கைகளை முன்ன்றிந்து தடுக்கவல்ல தேச அளவிலான புலனாய்வு முகமையை சட்ட ரீதியாக உருவாக்குவதும், அயல்நாடுகளில் இருந்து பயங்கரவாதத்திற்கு வரும் நிதியை தடுக்க ‘சட்டத்திற்குப் புறம்பான பண பரிமாற்றத் தடைச் சட்டம்’ நிறைவேற்றப்படுவதும் ஆகும் என்று சிதம்பரம் கூறினார்.
மும்பைத் தாக்குதலிற்கு உளவுத் துறையின் தோல்வியே காரணம் என்று ஒப்புக்கொண்ட சிதம்பரம், “நமது உளவு அமைப்பின் அடிப்படை பலமாக உள்ளது, ஆனால் உளவுத் தகவல் சேர்க்கையும், அதனை பயனுள்ள வகையில் பரிமாறிக் கொள்ளவும் அதன் செயல்பாட்டை முறைப்படுத்த வேண்டியுள்ளது” என்று கூறினார்.
நமது நாட்டின் 7,500 கி.மீ. கடற்கரையை பாதுகாக்க கடலோர பாதுகாப்பு திட்டம் தீட்டப்பட்டு, அதற்கு 2005ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ.400 கோடி மூலதன ஒதுக்கீடும், ரூ.150 கோடி தொடர் செலவுகளுக்கு ஆகவும் ஓதுக்கீடு செய்யப்பட்டது என்றும் கூறிய அமைச்சர் சிதம்பரம், இத்திட்டத்தை நமது நாட்டின் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாக்க அரசு முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
பயங்கரவாத தாக்குதல்களைச் சமாளிக்க ‘இந்தியா ரிசர்வ்’ எனும் சிறப்பு அதிரடிப் படை மத்திய அரசு உதவியுடன் மாநிலங்களில் உருவாக்கப்படும் என்று கூறிய சிதம்பரம், நாடு முழுவதும் 20 இடங்களில் தீவிரவாத, பயங்கரவாத தடுப்பு பயிற்சிப் பள்ளிகள் துவக்கப்படும் என்றும், இது தவிர, தேச பாதுகாப்பு காவலர்கள் படை (National Security Guards - NSG) நாட்டின் பல இடங்களில் நிரந்தரமாக நிறுத்தப்படும் என்றும் கூறினார்.
“பயங்கரவாத சவால்களை நமது நாடும் மக்களும் எதிர்கொள்வதற்கு தயார்படுத்தும் வகையில் அடுத்த சில வாரங்களில், சில மாதங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை நான் மேற்கொள்ளப்போகிறேன்” என்று அமைச்சர் சிதம்பரம் கூறினார்.