மும்பையைத் தாக்கிய பயங்கரவாதிகளுக்கு லஸ்கர் ஈ தயீபா இயக்கத்தின் தலைவர் ஹஃபீஸ் மொஹம்மது சயீத் பயிற்சி அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மும்பையைத் தாக்கும் திட்டத்தை உருவாக்குவதிலும், பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிப்பதிலும், திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் ஹஃபீஸ் மொஹம்மது சயீத், ஜாகீர் ரெஹ்மான் லாக்வி, அபு ஹம்சா, காஃபா ஆகிய நான்கு பேர் முக்கியப் பங்கு வகித்துள்ளனர் என்று காவல்துறை இணை ஆணையர் (குற்றப் பிரிவு) ராகேஷ் மரியா தெரிவித்தார்.
பத்து பயங்கரவாதிகளுக்கும் முரிட்கே என்ற இடத்தில் பயிற்சி அளித்தபோது, லஸ்கர் ஈ தயீபா மற்றும் ஜமாத் உத் தவா அமைப்பு ஆகியவற்றின் நிறுவனரான ஹஃபீஸ் மொஹம்மது சயீத் உத்வேகமளிக்கும் உரைகளை நிகழ்த்தியதாக, தாக்குதலின்போது கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி அஜ்மல் அமீர் இமான் கூறியதாக மரியா தெரிவித்தார்.
தற்போது பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டுள்ள லஸ்கர் ஈ தயீபா இயக்கத்தின் மூத்த தலைவர் ஜாகீர் ரெஹ்மான் லாக்விதான் மும்பை மீது பயங்கரமான தாக்குதல்களை நடத்தும் சதித்திட்டத்தை உருவாக்கியவர். மேலும், கராச்சியில் இருந்து நவம்பர் 22 ஆம் தேதி மும்பைக்குப் புறப்பட்ட பயங்கரவாதிகள் பத்து பேருக்கும் நடந்த வழியனுப்பு விழாவில் லாக்வியும் பங்கேற்றுள்ளார் என்றார் மரியா.
கராச்சியில் இருந்து மும்பைக்கு வர பயங்கரவாதிகள் பயன்படுத்திய அல் ஹூசைனி என்ற பாகிஸ்தான் கப்பலும் லாக்விக்குச் சொந்தமானது என்று விசாரணையில் அஜ்மல் கூறியுள்ளார்.
மும்பையைத் தாக்கிய பயங்கரவாதிகள் பத்து பேருக்கும் பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் கடந்த ஒரு ஆண்டாக வழங்கப்பட்ட பயிற்சியில் அபு ஹம்சா, காஃபா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் இன்னும் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர் என்றார் மரியா.