ராய்ப்பூர்: பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைத்துள்ள மாநிலங்களான சத்தீஷ்கரில் ராமன் சிங்கும், மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் செளகானும் டிசம்பர் 12 ஆம் தேதி முதல்வர்களாக பதவியேற்கவுள்ளனர்.
அதற்கு ஏதுவாக அவர்கள் இருவரும் அந்தந்த மாநில பா.ஜ.க. சட்டப்பேரவைத் தலைவர்களாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நடந்து முடிந்த சத்தீஷ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. 50 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
இதையடுத்து இன்று நடந்த அக்கட்சியின் எம்.எல்.ஏ. கூட்டத்தில், தற்போதைய முதல்வர் ராமன் சிங்கை சட்டப்பேரவைத் தலைவராக நியமிக்கும் பரிந்துரையை மூத்த தலைவர் பிரஜ்மோகன் அகர்வால் முன்வைத்தார். அதற்கு மற்ற அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் ரவிசங்கர் பிரசாத், கட்சி விவகாரங்கள் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதேபோல மத்தியப் பிரதேசத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிவராஜ் சிங் செளகான் சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தக் கூட்டத்தில், பா.ஜ.க. மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் வெங்கையா நாயுடு, கட்சியின் பொதுச் செயலரும் மாநிலப் பொறுப்பாளருமான ஆனந்த் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.