மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் மிகவும் கொடூரமானவை என்று கூறியுள்ள நாடாளுமன்றம், பயங்கரவாதத்தை முறியடிக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற நாசகரத் தாக்குதல்களைத் தடுக்கத் தேவையான எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றம் கூறியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் மூன்றாம் பகுதி இன்று துவங்கியது. அப்போது மக்களவையில் அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, மாநிலங்களவையில் அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோர் அஸ்ஸாமில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கும், மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
"பொது மக்களும் அரசும் இணைந்து பயங்கரவாதத்தை அடியோடு முறியடிக்க வேண்டும்" என்று மாநிலங்களவையில் ஹமீத் அன்சாரி வலியுறுத்தினார்.
பிரபலமான நட்சத்திர விடுதிகள், பொது மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் ஆகியவற்றில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள மிகவும் கொடூரமான தாக்குதல்களால் நமது நாட்டின் பொருளாதாரத் தலைநகரமான மும்பை ஸ்தம்பித்துவிட்டது" என்ற மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, "மனிதத் தன்மையற்ற கோழைத்தனமான இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க எல்லா முயற்சிகளையும் எடுக்கவும், பயங்கரவாதத்தை முறியடிக்கக் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இந்த அவை வலியுறுத்துகிறது" என்றார்.