மும்பையில் உள்ள தாஜ் நட்சத்திர விடுதியின் புதிய கட்டடத்தின் 20 ஆவது மாடியில் திடீரென்று தீ பிடித்தது.
நவம்பர் 26 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிற்குப் பிறகு பயன்படுத்தாமல் வைக்கப்பட்டிருந்த கட்டடப் பகுதியில் தீ பிடித்ததாகவும், இதில் சேதங்கள் எதுவும் இல்லை என்றும் தீ அணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தாஜ் நட்சத்திர விடுதி நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், 20 ஆவது மாடியில் உள்ள சமையலறையில் தீ எரிந்து கொண்டிருந்ததை பராமரிப்பு ஊழியர்கள் இன்று காலை 7.15 மணிக்குக் கண்டுபிடித்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
தகவலறிந்ததும் விரைந்து வந்த தீ அணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி 8.30 மணி அளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையில் சம்பவ இடத்தில் உள்ள ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் சமூக விரோதிகள் செய்த நாசவேலையாக இது இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.