மும்பை மீதான தாக்குதலிற்குப் பிறகு பாகிஸ்தான் அதிபரைத் தொலைபேசியில் தான் மிரட்டியதாக வெளியான தகவலைத் திட்டவட்டமாக மறுத்துள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிரச்சனையைத் திசை திருப்புவதற்காகச் சில சக்திகள் பரப்பியுள்ள வதந்தி இது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரணாப் முகர்ஜி இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
'மும்பை மீதான தாக்குதல்களுக்குப் பிறகு நவம்பர் 28 ஆம் தேதி என்னிடம் இருந்து மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்ததாக வெளியான தகவலை பாகிஸ்தான் அதிபர் சர்தாரி நம்பிவிட்டதாக மூன்றாம் நாடுகளில் உள்ள நண்பர்களின் மூலமாக நாங்கள் அறிந்து கொண்டோம்.
அதுபோன்ற எந்த அழைப்பையும் நான் செய்யவில்லை என்று அந்த நண்பர்களுக்கு நாங்கள் உடனடியாக தெளிவுபடுத்தினோம். பாகிஸ்தான் அதிகாரிகளிடமும் நாங்கள் இதைத் தெளிவாகக் கூறியுள்ளோம்.
இருந்தாலும், இதுபோன்ற புரளி அழைப்புகளை மற்ற நாடுகளை நம்பச் செய்வதன் மூலமும், அதனடிப்படையில் செய்திகளை வெளியிட்டு மக்களைக் குழப்புவதன் மூலமும், அண்டை நாடு நடவடிக்கை எடுக்குமோ என்ற கவலை எங்களுக்கு உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள சில சக்திகள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தியுள்ள பிரச்சனையைத் திசை திருப்புவதற்காகத்தான், பாகிஸ்தானில் இருந்து இதுபோன்ற வதந்திகள் தொடர்ச்சியாக பரப்பப்படுகின்றன என்று மட்டும்தான் என்னால் கூற முடியும்.' என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இந்தியா வந்திருந்த பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியுடன் தலைநகர் டெல்லியில் தான் பேச்சு நடத்திய பிறகு நவம்பர் 28 ஆம் தேதி சர்தாரியுடன் பேசியதுதான், மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானிற்கு தான் மேற்கொண்ட ஒரே தொலைபேசி அழைப்பு என்றும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
முன்னதாக, மும்பை மீதான தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மிரட்டியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.