மத்திய அரசு, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்காவிட்டால் டிசம்பர் 20ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை பீப்பாய் ஒன்றுக்கு 43 டாலர் அளவுக்கு சரிந்ததையடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5ம் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2ம் என மத்திய அரசு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் குறைத்தது.
இந்த விலை குறைப்பு போதாது என்று பல்வேறு மோட்டார் தொழிற்சங்கங்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளன.
கனரக வாகனங்களுக்கு சேவை வரி மற்றும் நெடுஞ்சாலை சுங்க வரி சமீபத்தில் அதிகரிக்கப்பட்ட நிலையில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே, இந்த சங்கம் டீசல் விலை மற்றும் சேவை வரியை குறைக்கும்படியும், சுங்க வரியை ரத்து செய்யும்படியும் கோரி, வரும் 20ஆம் தேதி முதல் அகில இந்திய அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்து இருந்தது.
இந்தநிலையில், டீசல் விலை குறைப்பு போதாது என்று எதிர்ப்பு தெரிவித்தும், கூடுதலாக ரூ.10 வரை விலை குறைப்பு செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
இதற்கு முன்னதாக, டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வரும் 10ஆம் தேதி நாடு தழுவிய அளவில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.